சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். ஆனால் இம்முறை வடகிழக்கு பருவமழை என்பது ஜனவரி மாதம் தொடங்கி 10 நாட்கள் கடந்தும், தமிழகத்தில் பரவலாக மழையானது தொடர்ந்து வருகிறது.
இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் மூன்று புயல்கள் உருவாகியது. அதில் இரண்டு வங்கதேசம் பகுதிகளிலும், மற்றொன்று தமிழகத்தைத் தாக்கிய 'மிக்ஜாம்' புயல். குறிப்பாகச் சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயலால் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்தும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
மேலும், கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்ட மழையால் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழையானது பதிவானது. அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் தென் தமிழகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து, அதனின் தாக்கம் குறைந்து வருவதாகவும், விரைவில் வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிவடையும் என தெரியவருகிறது.
வடகிழக்கு பருவமழை:தமிழகம் மற்றும் புதுவையில், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பதிவான மழை அளவு 458.மி.மீ. அந்த காலகட்டத்தில், இயல்பான அளவு என்பது 442.8 மி.மீ ஆகும். இது இயல்பை விட 4 சதவீதம் ஆகும். மேலும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில், பதிவான மழை அளவு 49.2 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 6.8மி.மீ ஆகும். இது இயல்பை 618% சதவீதம் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையத்தின் அதிகாரிகள் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் தருவாயில் உள்ளன. மேலும், ஜனவரி 15 ஆம் தேதியில் தமிழகம் மற்றும் புதுவையில், வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை விலகுதல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மதுரை பெரியகுளம் கண்மாயில் குப்பைக் கொட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு; ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு..!