சென்னை: இளையோர் பார்வையில் வடசென்னை என்ற தலைப்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமித்திஸ்ட்டில் இரண்டு நாள் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இறுதி நாளான இன்றும் திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு புகைப்படக் கண்காட்சிகளைக் கண்டுகளித்து செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "வட சென்னை எனது தாய் நிலம். எல்லோரும் வட சென்னையை வேறு மாதிரி பார்க்கலாம். ஆனால் சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பவன் நான்" எனத் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியது சரியா என்ற கேள்விக்கு, "அது முற்றிலும் தவறு. ஆளுநரின் செயல் அப்படி இருந்திருக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, "இளையோர் பார்வையில் வடசென்னை" என்ற தலைப்பிற்கிணங்க, 14 முத்த 22 வயது உடைய வடசென்னையில் வசிக்கும் ஆறு இளைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
சமூக மற்றும் சூழலியல் அநீதிகளை வெளிக்கொண்டுவரும் விதமாக இந்த ஆறு புகைப்படக் கலைஞர்களின் புகைப்படத் தொகுப்பில் எண்ணூர் முதல் பழவேற்காடு வரை உள்ள மக்களின் உழைப்பு, காற்று மாசுபாடு, தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர், புகை மண்டலம் மத்தியில் மக்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதை இந்தப் படங்கள் எடுத்துக்கூறும் வண்ணமாக விளங்கியது.
செய்தியாளரைச் சந்தித்த பா. இரஞ்சித் மேலும் இந்தப் படங்கள் மக்களின் பண்பாடு, விளையாட்டு, இழப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தியுள்ளது. இது வடசென்னை பற்றிய புதிய கண்ணோட்டத்தை நமக்கு அளிக்கிறது. இது குறித்து காலநிலைச் செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர் நம்மிடம் கூறுகையில்,
"வட சென்னையில் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் வகையில் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மேலும் மக்கள் வசிக்குமிடத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனை வெளிப்படுத்தும்வகையில் இந்தப் புகைப்படங்கள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு: முன்னாள் உதவிப் பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்