சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (அக் 31) மாலை தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வடசென்னையை பொறுத்தவரையில் பெரம்பூரில் 122 மிமீ மழையும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 102 மிமீ மழையும், தண்டையார்பேட்டை பகுதியில் 98 மிமீ மழையும், அயனாவரம் பகுதியில் 95 மிமீ மழையும் பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பட்டாளம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு, புளியந்தோப்பு, எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வடசென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ககன்தீப் சிங், பட்டாளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேயர் பிரியா தண்டையார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்