சென்னை:கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து மீனவர்கள் மீஙடை, உணவகம் அமைத்துள்ளதால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படுகிறது என கூறி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி மீன் கடைகளை ஒழுங்குபடுத்த அரசுக்கும் மாநகராட்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றத்துவங்கினர். அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து மீனவர்கள் மீன்பிடி படகுகளை சாலையில் நிறுத்தி சாலையை முடக்கி போராட்டத்தில் இறங்கினர். பல அரசியல் கட்சித் தலைவர்களும் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மீனவர்களின் போராட்டம் குறித்து எதிர்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஓ.பன்னீர்செல்வம், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினர்.
இதனையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள லூப் சாலை விவகாரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள் அதிகமாக கடலை நம்பியே தொழில் செய்து வருகிறார்கள். அதிலும் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிகம் பேர் கடலை நம்பியே வாழ்கிறார்கள். சென்னை வாசிகளுக்கும் ப்ரெஷ் ஆன மீன் வேண்டும் என்றால் நொச்சிக்குப்பம் போகலாம் என்ற எண்ணமாக உள்ளது.
அதனால் தான் அங்கு மக்கள் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டதால் தான் நேற்று வரை லூப் சாலையில் போக்குவரத்தை தடை செய்து வைத்திருந்தவர்கள், இன்று காலை முதல் நொச்சிக்குப்பம் சாலையில் மீனவர் சங்கங்கள் சாலை போக்குவரத்தை அவர்களே முறைப்படுத்தி தற்போது சீராக நடந்து கொண்டிருக்கிறது.
அதையும் கடந்து முதலமைச்சரின் மிக தீவிரமான நடவடிக்கையால் இவ்வழக்கில் தமிழக அரசு மீனவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களை வழக்காட செய்து மீனவர்களுக்கு தேவையான உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது மீனவர்கள் தரப்பில் வலுவான வாதங்களை முன் வைத்துள்ளது.
மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிழக்கிலும் மேற்கிலும் கடைகள் அமைத்துக் கொள்ள மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தை பதிவு செய்திருக்கிறார்கள். எந்தவிதமான போக்குவரத்து பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரும் உயர்நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரு பக்கமும் மீனவர்கள் மீன்கள் வியாபாரம் செய்யவதை உறுதிப்படுத்துவோம் என பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு 19.06.2023 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சனை காலையில் முடிவுக்கு வந்துவிட்டது” என அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகள்!