சென்னை: திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் மற்றும் துரித பணிகளால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை இன்று (13.11.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
சென்னை, சைதாப்பேட்டையில், டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில் செய்தியாளர்களைச் சந்தித்து, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், மேற்கொண்ட ஆய்வு குறித்தும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் விரிவாக விளக்கிக் கூறினார்கள்.
அடாது மழை பெய்தாலும், விடாது ஆய்வுப் பணி தொடரும் என இன்று (13.11.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் சைதாப்பேட்டையில் ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்கள்.