கோடை வெப்பம் கடுமையாக இருந்தாலும் இந்தாண்டு பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளில் இருக்கும் நீரை வைத்து குடிநீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதமாக கோடை வெப்பம் கடுமையாக மக்களை வாட்டிவருகிறது. கடந்தாண்டு இதுபோன்ற வெப்பக் காலத்தில் சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையாக அவதிப்பட்டனர்.
இந்தாண்டு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஆந்திர அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 25ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தத் தண்ணீர் கடந்த 29ஆம் தேதி தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு 60 கனஅடியாக தண்ணீர் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து 30ஆம் தேதி பூண்டி ஏரியில் வந்து கலந்தது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இங்கிருந்து சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வினாடிக்கு 250 கனஅடியாகவும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாய் வழியாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போது பூண்டி ஏரியில் 392 மில்லியன் கனஅடியும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1.89 மில்லியன் கனஅடியும் சோழவரம் ஏரியில் ஒரு மில்லியன் கனஅடியும் புழல் ஏரியில் 2.719 மில்லியன் கனஅடியும் நீர் இருப்பு உள்ளது.
இதனால் சென்னை நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் கூறும்போது, “தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் கடந்த 25ஆம் தேதி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது. நேற்று நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும், இன்றைய நிலவரப்படி 250 முதல் 280 அடி கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது.
இந்தாண்டு, சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது! நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கால்வாய், பூண்டி ஏரியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டு களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணித்துவருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க:கோவை மண்ணின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்யவேண்டும் - சீமான் கோரிக்கை