சென்னை: பல்கலைகழக மானியக்குழு (UGC) விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப்பட்ட அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் தமிழ்நாட்டில், கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வு தவிர, பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோன்று அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
அரியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் தேர்ச்சி உத்தரவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுதொடர்பான மனுவில், 'அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'அரியர் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய முடியாது. அதற்கான அதிகாரமில்லை. எனவே தேர்வு ரத்தை ஏற்க முடியாது என, திட்ட வட்டமாக தெரிவித்திருந்தது. இவ்வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா பாதிப்பின் காரணமாக மாணவர் சமுதாயமே எதிர்பாராத வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் மாணவர்கள் ஆளாகியுள்ளனர். முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு, விடுதிகள் காலி செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு மாணவர்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.
பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள், நோட்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால், அனைத்து பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் எந்த ஒரு விதிமுறை மீறல் கிடையாது. மாணவர்கள் நலன் கருதி, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும் என்றும், திருப்தி அடையாத மாணவர்கள் தேர்வுகளை எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளதால், பல்கலைக்கழகங்கள் தங்களுக்குச் சொந்தமாக திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது மாணவனின் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
மாநில அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதும் ஆகாது. மேலும், பல்கலைக்கழகளுக்குத் தனிப்பட்ட அதிகாரம் உள்ளதால் தான் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்தப் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.