சென்னை:பி.இ., பி.டெக் படிப்பில் 4 சுற்று பொதுக்கலந்தாய்வு முடிந்த நிலையில், 14 கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை எனவும்; 12 கல்லூரியில் மட்டுமே 100 விழுக்காடு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் எனவும் கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, "பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் 4 சுற்று பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்த நிலையில், 14 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற விவரமும், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 22 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 5 சதவீதத்திற்கும் குறைவாக 43 கல்லூரிகளிலும், 10 சதவீதத்திற்கும் குறைவாக 63 கல்லூரிகளிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 110 கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும் 49 கல்லூரிகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவர்களும், 90 சதவீதத்திற்கும் அதிகமாக 66 கல்லூரிகளிலும், 75 சதவீதத்திற்கும் மேல் 138 கல்லூரியிலும், 237 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
12 கல்லூரிகளில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 40 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்தாண்டை ஒப்பிடும்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது" என்றார்.
தொடர்ந்து இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். 4 சுற்றுக்கலந்தாய்வு முடிந்த நிலையில், 12 பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளன. கடந்தாண்டில் 16 கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. கடந்தாண்டு 7 கல்லூரியில் மட்டுமே ஒரு மாணவரும் சேராமல் இருந்த நிலையில், நடப்பாண்டில் 14 கல்லூரியாக அது அதிகரித்துள்ளது.
அதேபாேல் கடந்தாண்டு 85 கல்லூரியில் 90 விழுக்காடு இடங்கள் நிரம்பிய நிலையில், நடப்பாண்டில் 66 என குறைந்துள்ளது. நடப்பாண்டில் ஒற்றை இலக்கத்தில் 63 கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் படிப்புகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்'' என்றார்.
இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு பிரசவ வலி; ஆம்புலன்சில் பிறந்த குழந்தை