தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை - சயான்

கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை
கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை

By

Published : Aug 27, 2021, 1:27 PM IST

Updated : Aug 27, 2021, 5:43 PM IST

13:22 August 27

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பில் இருந்தும் மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்கவில்லை எனவும், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனுபவ் ரவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம், சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல், குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்துவிட்டு, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக காவல்துறை நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஏ.எல்.சோமையாஜி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்ற வழக்கின் விசாரணையே தொடங்கிய பின் குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த முடியாது எனவும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு நிராகரிக்கபடவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே யூகத்தின் அடிப்படையில் கூறப்படுபவை. மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல, வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார். காவல்துறை மேல்விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை பொறுத்து நீதிமன்றம் தான் முடிவெடுக்கப் போவதாகவும் கூறினார்.  

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (ஆகஸ்ட் 27) அளிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி  இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டார்.  

வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றும்,  வழக்கு விசாரணையை தாமதப்படுத்தினாலும் உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும் என்றும், தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற விசாரணையை தொடர காவல்துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டார்.  

காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணம் அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என நீலகிரி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், வழக்கு தொடர்ந்தவர் குற்றவாளியோ? புகார்தாரரோ? அல்ல, சாட்சி மட்டுமே. என தெரிவித்து கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மேல்விசாரணை தடை கோரி அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

இதையும் படிங்க :பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Last Updated : Aug 27, 2021, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details