சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்ட பிறகு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் மார்ச்1ஆம் தேதிமுதல் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்தவே பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியும் வழக்கம் பொதுமக்களிடம் அறவே இல்லாமல் போய்விட்டது. விதிகளை முறையாகப் பின்பற்றாததால் காஞ்சிபுரம், கிண்டியில் கல்வி நிலையங்களில் கரோனா பரவியுள்ளது.
காவல் துறை, சுகாதார அலுவலர்களைப் பார்த்த பிறகே முகக் கவசம் அணிகின்றனர். மருத்துவமனைக்கு உள்ளேயே கரோனா விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் அமர்ந்துள்ளனர்.
உருமாறிய கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தற்போது இல்லை. இரட்டிப்படையும் வேகமும் தமிழ்நாட்டில் இல்லை. ஐடிஐகளை உடனடியாக மூடாமல் பரிசோதித்த பிறகு மாணவர்களை அனுப்பிவைக்க வேண்டும். அதுவே சரியான நடைமுறை.
கிராமங்களில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பிலும், நகரங்களில் 3,960 குடியிருப்புகளிலும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 512 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அன்றாட பாதிப்பு மேலும் உயர்ந்து 2,000 பாதிப்புகளைத் தொட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளன.
மருத்துவமனைகளிலே விதிகள் பின்பற்றப்படுவதில்லை தமிழ்நாட்டில் இதுவரை 39 ஆயிரத்து 70 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 14 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. மேலும் 10 லட்சம் தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. 357 கிலோ லிட்டரிலிருந்து 778 கிலோ லிட்டராகஆக்சிஜன் அளவு மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் இவை பயன்படும்.
பரிசோதனை மேற்கொள்ளாமல் கரோனா குறைந்துவிட்டதாகக் கணக்கு காட்டலாம். ஆனால் நாம் தொடர்ந்து கூட்டம் மிகுந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்கிறோம். கரோனா வைரஸ் (தீநுண்மி) குறைந்தபின் மீண்டும் 450 தொட்டபோதே எச்சரித்தோம், கரோனா சங்கிலியை உடைக்க முகக்கவசம் அவசியம். வேறு வழியே இல்லை. நாக்பூரில் பொதுமக்களிடையே வதந்தி பரவியது கரோனா அதிகரிக்க காரணமாக அமைந்தது.
மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கரோனா தீநுண்மி தொட்டில் பழக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்கிறோம். தடுப்பூசியை அதிகரிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குத் தேர்தல், ஹோலி, பங்குனி உத்திரம் பண்டிகை குறித்து கண்காணிக்க கூறியுள்ளோம். பண்டிகை காலங்களில் கடந்த ஆண்டுகளில் கொண்டாடியதுபோல் கொண்டாட வேண்டும். இது குறித்து அரசு ஆய்வுசெய்து அறிவிக்கும் எனக் கூறினார்.
மேலும், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கூட்டங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் சென்ட்ரல் ஐடிஐ-யில் பரவியதுபோல கரோனா பரவ வாய்ப்புள்ளது.
தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வோர் சிறப்புப் பேருந்துகளில் கடைசி நேரத்தில் செல்லாமல் முன்கூட்டியே செல்ல முயற்சிக்க வேண்டும். ஏறுமிடம், சேருமிடங்களில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது குறித்து போக்குவரத்துச் செயலரிடம் கூறியுள்ளோம். சிபிஎஸ்இ பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம்.
தேர்தல் பணியாளர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். விதிகளை மீறிச் செயல்படும் பள்ளி, கல்லூரியில் சுகாதார சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்தால் 100 விழுக்காடு பணியாளர்கள் இருந்தாலும் கரோனா பரவாது" எனக் கூறினார்.