சென்னை: பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப் என்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிவேதா ஜெஸ்ஸிகா. இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல் துறை ட்விட்டர் பக்கத்தை இணைத்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நேற்று இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச்செல்லும் போது, கறுப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அசோக் பில்லர் பகுதியிலிருந்து பின் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். ஒல்லியான உருவம் கொண்ட அந்த நபர் ஆலந்தூர் வரை பின்தொடர்ந்து வந்ததாகவும், அதன்பின் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அடையாளம் தெரியாத நபர் சென்றுவிட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது, மீண்டும் அந்த நபர் பின் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். சரியாக ஒரு மணி அளவில் கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதியைக் கடந்து செல்லும்போது அந்த நபர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், செல்போன் பறிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பசு ஒன்றின் மீது மோதி செல்போனை கீழே தவற விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்மீது தவறாக நடந்து கொண்ட அந்த இளைஞர் தைரியமாக, ’தான் இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என மிரட்டி சென்றதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவ்வாறு நடந்து கொண்ட அடையாளம் தெரியாத நபரை தன் இரு சக்கர வாகனத்தில் துரத்திப்பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அந்த நபர் தப்பிச்சென்று விட்டதாகவும் ஜெஸ்ஸிகா தெரிவித்துள்ளார்.