சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை ஜிம்கானா கிளப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், இவரைப்போல ஒரு ஆட்சியாளர் இந்தியாவிலேயே இல்லை என்பது போல அவரது ஆட்சி காலம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் இருந்தது.
மக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உறுதியாக இருந்தவர், குறிப்பாக விவசாயம், 13 தடுப்பு அணைகள் கட்டி தமிழகத்தை விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜருக்கு பெரும் பங்கு உண்டு. எல்லா துறைகளிலும் சாதனை செய்த காமராஜர் ஒரு 360 டிகிரி முதலமைச்சர். தமிழகத்தில் மட்டுமல்லாது காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்.
திமுக செய்யக்கூடிய அரசியலில் இதை ஒரு புது அரசியலாகத்தான் பார்க்கிறேன். திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதுதான் அவர்களுடைய முதல் தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை என்று அவர்கள் சொன்னதற்கு பிறகும் முதலமைச்சர் ஏன் கர்நாடகா செல்ல வேண்டும். மேகதாது அணை கட்டவே முடியாது என்கிற நிலையில் காங்கிரஸ் ஆட்சி அதை கட்டியே தீர வேண்டும் என்று முயற்சி செய்கிறது. அதைப்பற்றிய தீர்மானங்கள் அதில் இல்லை. இவர்களது தீர்மானம் வெறும் பொய்யும் புரட்டுமாகத் தான் உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதற்கு தான் இந்த தீர்மானங்களை போட்டிருக்கிறதா?