சென்னை: கள்ளக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, ரிஷிவந்தியத்தில் அரசு கலைக்கல்லூரி, சங்கராபுரத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார்.
மாணவர்களை சேர்ப்பதற்காக 64 ஆயிரத்து 377 இடங்கள் உருவாக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை
அதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதால் எந்தவித பலனும் இல்லை. அதற்கு பதிலாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். திமுக அரசு சென்னையில் இயங்கும் மீனவர் பல்கலைக்கழகத்திற்கும், இசை பல்கலைக்கழகத்திற்கும் ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை. இதில் எந்தவித காழ்ப்புணர்ச்சி உடனும் செயல்படவில்லை.