சென்னையில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கிடையாது! - சென்னையில் 12ஆம் வகுப்பு
சென்னை: கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இந்தாண்டு சென்னையில் மேற்கொள்வதில்லை என அரசு தேர்வுத்துறை முடிவு எடுத்துள்ளது.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு திருத்தும் பணிகள் நடைபெறும். ஆனால், இந்தாண்டு கரோனா வைரஸ் தாக்குதலால் மாணவர்களின் தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 24ஆம் தேதி நிறைவடைந்தன. ஆனால், உடனடியாக கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் விடைத்தாள்கள் மாவட்டங்களிலேயே பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தற்போது மாணவர்களின் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வேறு மாவட்டங்களிலிருந்து விடைத்தாள்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், தற்பொழுது சென்னையில் நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருவதால், விடைத்தாள்களை திருத்தாமல், வேறு மாவட்டங்களில் திருத்துவதற்கு அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையிலிருந்து விடைத்தாள்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், இந்த ஆண்டு விடைத்தாள்கள் வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: கரோனாவுக்கு நன்றி தெரிவித்த இந்து மக்கள் கட்சி!