சென்னை ஐஐடியில் பயின்றுவந்த பாத்திமா என்ற மாணவி, சில நாள்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், பாத்திமாவின் தந்தை லத்தீப்பிடம் இன்று விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதலமைச்சர், காவல் துறை தலைமை இயக்குநர் என இதுவரை நான் சந்தித்த அனைவருமே என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்டு உங்களுக்கான நீதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். எனது மகள் நன்கு படிக்கக்கூடியவள், அவளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.
விசாரணை அலுவலர்கள் கேட்ட தகவல்களைக் கொடுத்தேன். பாத்திமா பயன்படுத்திய கணினி உள்ளிட்ட பொருள்களை விசாரணைக்கு எடுத்து வரச் சொன்னார்கள். விசாரணை முடியும் வரை இங்குதான் தங்கவுள்ளோம். தற்கொலை செய்துகொள்ளும் முன் 28 நாள்களுக்கான டைரி குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்கொலையை முதலில் பார்த்த நபர் எங்களிடம் பேசிய கேட்பொலியை (ஆடியோ) விசாரணைக்காகக் கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.