சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எழிலகத்தில் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் "வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழை மேகவெடிப்பால் பெய்யவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 24மணி நேரத்தில் வரலாறு காணாத மழைபெய்துள்ளது. திருநெல்வேலி 39 செ.மீ மழையும், பல இடங்களில் 60 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 932 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆண்டு முழுவதும் பெய்த மழை கூட இந்த அளவிற்குப் பதிவானது கிடையாது.
இதுவரை 7,500 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார். 84 படகுகள் மீட்புப் பணியில் உள்ளது. இராணுவத்தின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தனர். ஆனால் இதுவரை வரலாற்றில் பெய்யாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
3,863 புகார்கள் 1070 புகார் எண்ணுக்கு வந்துள்ளது. 96% பேருந்துகள் பெரும்பாலும் இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்குப் பேருந்து வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வானிலை ஆய்வு மையம் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது, ஆனால் மிக மிக அதிக கன மழை பெய்துள்ளது. தற்பொழுது எங்களுக்கு உள்ள சவால் மழை வெள்ளத்தில் சிக்கி இருக்கக்கூடிய மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் கொண்டு செல்வது மட்டுமல்லாது அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவதும் ஆகும்.
எனவே, தற்பொழுது தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் படையினர் கூடுதலாக அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ராணுவம், நேவி உள்ளிட்ட படையினரும் அந்த பகுதிக்கு விரைகின்றனர். உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவுகளைப் படகுமூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டிய சூழலில் உள்ளது. மேலும், அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னையை விடத் தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது மழை நின்ற பிறகு தான் நமக்குத் தெரியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் குறித்துக் கேட்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மனோ தங்கராஜ், திருநெல்வேலியில் தங்கம் தென்னரசு, அப்பாவு உள்ளிட்டோரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அதேபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே பத்திரமாக இருங்கள். அவசரப்பட்டு வெள்ளத்தில் வெளியே வர வேண்டாம் எனவும் உதவிக்கு 1070 என்ற எண்ணுக்கு அழைக்கவும் எனவும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சென்னையில் இருப்பவர்கள் தென் மாவட்டங்களுக்கு மிக அவசர வேலை இருந்தால் மட்டும் புறப்படுங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம் எனவும் அவர் சென்னை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் அதி கனமழை; திருநெல்வேலியில் நிவாரண பணியில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!