சென்னை: கலைவாணர் அரங்கில் 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், " ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, முதியோர் உதவித்தொகை, இல்லத்தரசிகளுக்கு நிதி உதவி, ஏழு பேர் விடுதலை விவகாரம் உள்பட எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
ஆளுநர் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் இல்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு திமுக தேர்தலுக்கு முன் ஒரு அறிக்கை, தேர்தலுக்குப் பின்னர் ஒரு செயல்பாடு எனச் செயல்பட்டு வருகிறது. திமுக தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி விவசாயிகளுக்கான கடன் ரத்து திட்டம் செயல்படுத்தவில்லை, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டமும் செயல்படுத்தாமல் உள்ளது. மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடியை செயல்படுத்த வேண்டும். தற்போது பயிர் சாகுபடி காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று பரிசோதனை செய்வதில் குளறுபடி உள்ளது. இதில் திமுகவின் செயல்பாடு சரியில்லை. மேலும் தமிழ்நாட்டில் கரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கோதாவரி - காவிரி திட்டம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஊரடங்கு நடவடிக்கைகளை திமுக அரசு சரிவர கையாளவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநரின் உரையின் முக்கிய அம்சங்கள்