சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜன.24) மாலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை பெறப்பட்டது. இதில் மாணவர்களிடம் இருந்து 25 ஆயிரத்து 593 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 24,949 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டம்
இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களின் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 16,029 மாணவர்கள் பயின்று விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 8,451 மாணவர்களும், ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 299 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவப் படிப்பில் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்படும்.
27 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு 76 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 360 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 10 பேருக்கும் பல் மருத்துவ படிப்பில் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 156 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 7 பேருக்கும் வீடியோஸ் படிப்பில் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்படும்.