சென்னையில் இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று (மார்ச் 24) நடைபெற்ற உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் தலைவர் சீதாராம் கூறுகையில், உயர்கல்வியில் கொண்டு வரப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம்.
தேசிய கல்வி கொள்கையின் மூலம் உயர் கல்வியில் தரத்தை உயர்த்துவது தான் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான 2023-24 ஆம் ஆண்டிற்காக கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசியக்கல்விக் கொள்கை அடிப்படையில் கல்லூரிகளை தொடங்குவதற்கும், மாற்றங்களை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.