சென்னை: கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகாவில் உள்ள வண்ணான்குடிக்காடு கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 715 சதுர மீட்டர் நிலம் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள நிலம் போதுமானதல்ல. பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், பள்ளிக்கு இடையூறு ஏற்படும். பள்ளிக்கு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், 103.55 சதுர மீட்டர் பரப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே இயங்கி வந்த பஞ்சாயத்து அலுவலகம் சிதிலமடைந்த நிலையிலிருந்ததால் 202 சதுர மீட்டர் பரப்புக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதி பள்ளி விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமானம் முடியும் தருவாயில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகத்தை இடிக்க உத்தரவிடுவது முறையாக இருக்காது. பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தால் மாணவர்களின் படிப்பு, பாதுகாப்பு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
அதேசமயம், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ளாட்சி மற்றும் அரசு அமைப்புகளுக்காக இனிமேல் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுபோல கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் விளையாட்டு மைதானம் போன்ற திறந்த வெளி நிலங்கள் ஒதுக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசின் கொள்கைப்படி ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிலம் ஒதுக்கப்படுவதை அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்வதுடன், பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானங்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:“சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்