தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - ஓபிஎஸ் கண்டனம்! - tribal community

"படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை” எனத் தன்னிச்சையாக கருத்து தெரிவித்த அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்!
படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

By

Published : May 30, 2022, 1:05 PM IST

சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் போன்ற சமுதாயத்தினர் 15 இலட்சம் பேர் பயனடைய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, இன்று "படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை” என்று தன்னிச்சையாக சொல்வது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்.

சமயத்திற்கு் தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி திமுக என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

பழமை வாய்ந்த விசேஷ குணம், தனித் தன்மை வாய்ந்த கலாச்சாரம், பெரும்பாலும் பொதுமக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூச்சப்படும் மனப்பான்மை, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை என பழங்குடியின மக்களுக்கான பிரத்யேக குணங்களை தன்னகத்தே கொண்டவர்கள், படுகர் இன மக்கள்.

புராதன பழங்குடியினர்: 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, பிற பழங்குடியின மக்களான 'தோடர்' இன மக்களுடன் 'படுகர்" இன மக்கள் பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலையில் வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவாகிறது.

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

முற்றிலும் மாறுபட்ட தங்களுக்கே உரிய கலாச்சாரம் மற்றும் மரபுரிமை கொண்ட இன மற்றும் மொழி சிறுபான்மை பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள், படுகர் சமுதாய மக்கள். படுகர் இன மக்களின் வாய்மொழி இலக்கியம், கோட்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவை நீலகிரி பழங்குடி மக்களுடன் அவர்களுக்குள்ள இணைப்பை வெளிப்படுத்தும்.

பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான முக்கிய குணாதிசயங்களில் ஒன்றான புராதன பழங்குடியினர் என்ற காரணி, படுகர் இன மக்களுக்கு நிச்சயம் பொருத்தும். இதன்மூலம், பழங்குடியினர் என வகைப்படுத்துவதற்கு உண்டான விரிவான குணாதிசயங்களை படுகர்கள் பூர்த்தி செய்திருப்பதால், பழங்குடியின பட்டியலில் சேர்க்க படுகர் இன மக்கள் முழுத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

ஜெயலலிதாவின் முன்னெடுப்புகள்: படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 05-01-2003 அன்றே மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சருக்கு விவரமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் விரைந்து சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 28-07-2011 அன்று கடிதம் வாயிலாக பிரதமரை வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தக்கோரிக்கை தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர், ‘படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

முதலமைச்சர் தலையிட வேண்டும்: படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற படுகர் இன மக்களின் கோரிக்கை, பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் "அதற்கு வாய்ப்பில்லை” என்று கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை, அடிப்படையே இல்லாமல் கருத்து கூறுவதுதான் 'திராவிட மாடல்' போலும்!

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில், இந்தக் கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், எந்த அடிப்படையில் 'அதற்கு வாய்ப்பில்லை" என்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் சொல்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 'படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை" என்று வனத்துறை அமைச்சர் தன்னிச்சையாக கூறியதைக் கண்டிக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வேண்டும் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details