தமிழ்நாடு அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., ‘இந்த அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையான இதில் ஏதாவது நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இந்த அறிக்கையில் தென்படவில்லை.
தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனைகளை பற்றி நிதிநிலை அறிக்கை எதுவுமே பேசவில்லை. வேளாண் மண்டல அறிவிப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சந்தேகத்தை தீர்க்கவில்லை.
வழக்கமான வரவு-செலவு கணக்குகளின்றி வேறெந்த புதிய திட்டங்களும் இல்லை. நீண்டகால திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளோ இல்லாத அறிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் அவற்றின் வளர்ச்சிக்கு எவ்விதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் வகுக்கப்படவில்லை. உருப்படியான எந்த பணிகளும் மேற்கொள்ள வழிவகை செய்யவில்லை. இன்னும் பல கிராமப்புற மக்களுக்கு ஓய்வூதியம் சென்று சேராத நிலை, ஏழை எளிய மக்கள் வதைப்படுகிறார்கள். அதற்கும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் இல்லை.