சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தலைமை அலுவலகத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால், ஐசிஎப் பொதுமேலாளர் ராகுல் ஜெயின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராஜேஷ் அகர்வால் கூறியதாவது, 12 பெட்டிகளுடன் கூடிய 12 ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்களை நடப்பாண்டு ஐசிஎப் தயாரிக்க இருக்கிறது. இவை சென்னைவாசிகளின் பயன்பாட்டிற்கு தற்போது வருவதற்கான சாத்தியம் இல்லை.
ராஜேஷ் அகர்வால் - செய்தியாளர்கள் சந்திப்பு தென்னக ரயில்வே சார்பாக மின்சார ரயிலில் ஏசி பெட்டிகள் இயக்க முன் மொழியாத காரணத்தால் சென்னையில் இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தாண்டு மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை புதிதாக தொடங்க இருக்கிறது. அதே போல் சென்னை-பெங்களூரு இடையே புதிதாக அதிவேக விரைவு ரயில் திட்டம் இல்லை.
சென்னை மெட்ரோ ரயிலுக்கான ரயில் பெட்டியை தயாரிப்பது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை இதுவரை கேட்கவில்லை. ஒருவேளை கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.