தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்.எல்.சி. பாய்லர் வெடி விபத்து: 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்! - சென்னை உயர் நீதிமன்றம்

NLC Boiler Accident Case : நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து 15 பேர் பலியான விபத்து தொடர்பான வழக்கில் அதன் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 7:31 AM IST

கடலூர்:நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு பாய்லர் வெடித்து 15 பேர் பலியான விபத்து தொடர்பான வழக்கில் அதன் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி காலை திடீரென வெடித்து தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பலர் காயமடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி அனல் மின் நிலைய காவல் நிலையத்தினர் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இடையீட்டு மனுதாரராக இணைந்துள்ள பாட்டாளி தொழில் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். உயிரிழப்புகள் நிகழ்வது தொடர் கதையாக உள்ளதால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், விபத்துகள் தொடர்பாக காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்.எல்.சி.க்கு சாதகமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

என்.எல்.சி. ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயந்திர கோளாறு காரணமாக நடைபெறும் விபத்திற்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், இதில் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். இதனை அரசியல் ஆதாயம் அடையும் வகையில் இடையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி கார்த்திகேயன், என்.எல்.சி. அதிகாரிகள் உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விபத்து தொடர்பான தற்போதைய விசாரணை வேறு அதிகாரிக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. முடிவு செய்ய வேண்டும் எனவும் பிறப்பித்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க:பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த 6 பேர் கைது.. நெல்லையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details