சர்ச்சைகளுக்குப் பெயர்போன நித்தியானந்தா, தனது அடுத்த சேட்டையை ஏழுமலையான் வேடத்தில் தொடங்கியுள்ளார். வெங்கடேசப் பெருமாள் போன்று சங்கு, சக்கரம், கண்கவரும் நகைகள், கிரீடத்துடன் இருக்கும் தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பக்தர்கள் கைலாசா நாட்டிற்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
அந்தப் பதிவில், "பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள். செல்வம் ஏராளமாகப் பெருகும். கைலாசா நாட்டிற்கு வருகைதாருங்கள்.
கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுக்கொள்ளலாம். உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவை ஆதரிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏழுமலையானைச் சீண்டும் நித்தி பாலியல் வல்லுறவு வழக்கில் அகமதாபாத் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, காவல் துறைக்குப் பயந்து 2019 அக்டோபர் மாதம் முதல் தலைமறைவானார்.
பின்னர், திடீரென யூ-ட்யூபில் தோன்றிய அவர், கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாகவும், தனிநாடு தகுதிக்கோரி ஐநாவிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார். நித்யானந்தாவுடன் கைலாசா நாடு, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
கைலாசா நாட்டிற்கென்று பிரத்யேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் நித்தி. எல்லாவற்றுக்கும் மேலாக, கைலாசாவில் ரிசர்வ் வங்கியைத் திறந்திருப்பதாகவும், பணம் என்ற பெயரில் சில தங்க நாணயங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
ஏழுமலையானாக முழுசா மாறிய நித்தியானந்தாவை பார் இச்சூழலில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கெட்அப் போட்டு அசத்தியிருக்கிறார். இதற்கு முன்னதாகத் தன்னை சிவபெருமான் என்றும், தான்தான் கடவுள் என்றும் பிரகடனப்படுத்தியவர் நித்தி. இதற்கு ஏழுமலையான் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:இலங்கை அழகிப் போட்டியில் குழப்பம்: கிரீடத்தைப் பறித்த முன்னாள் அழகி கைது!