தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தா ஆசிரமம் அகற்றம்.. வருவாய்த்துறை நடவடிக்கை!

பல்லாவரத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.

chennai
அரசு நிலத்தை ஆக்கிரமித்து நித்தியானந்தா ஆசிரமம்

By

Published : Aug 16, 2023, 7:23 AM IST

அரசு நிலத்தை ஆக்கிரமித்து நித்தியானந்தா ஆசிரமம்

சென்னை அடுத்த பல்லாவரம் பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாடுகள் வைத்து கோசாலை மற்றும் நித்தியானந்தா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் திரிசூலம் கைலாசா என்ற பெயரில் நித்தியானந்தா ஆசிரமம் இயங்கி வருகிறது.

இந்த ஆசிரமத்தில் நித்தியானந்தா சீடர்கள் தங்கி உள்ளனர். இந்த ஆசிரமத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆசிரமத்தை சுற்றியுள்ள நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனை ஆசிரமத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர் அந்த பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்தனர். அப்போது நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சொந்தமாக சுமார் 76 சென்ட் நிலத்திற்கு மட்டுமே பட்டா இருந்தது.

மேலும் அதனைச் சுற்றியுள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து மதில் சுவர் அமைத்து இருந்தது தெரிய வந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் நேற்று (ஆக்.15) பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்போடு நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் மீட்ட அந்த அரசு நிலத்தின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அந்த பகுதியில் மலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கும், வீடுகளை காலி செய்யக் கோரி அரசு தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அதிகாரி தெரிவித்து உள்ளனர். தற்போது அந்த பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளின் மதில் சுவர்கள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மந்திரத்திற்கு பதில் ராகுல், சோனியா பெயர் கூறி திருமணம்.. காங்கிரஸ் அலுவலகத்தில் சுவாரஸ்ய கல்யாணம்!

ABOUT THE AUTHOR

...view details