பொருளாதார நிபுணர் நானி பல்கிவாலாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. நம் நாட்டுக்கு மிதமான வளர்ச்சித் தேவையில்லை; வேகமான மாற்றம் தேவை. அப்போதுதான் இளைஞர்களுக்கு நம்பிக்கை எழும். ஆறு ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்து நீங்கள் (பாஜக அரசு) என்னென்ன மாற்றங்களைச் செய்தீர்கள் என்று கேட்கலாம்.
ஆனால், 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் சரியான முறையில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளோம். மாநில அரசுகளுடன் இணைந்து இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளோம்.
திவால் சட்டத்தின் மூலம் தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளோம். ஆனால், திவால் சட்டத்தில் நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வசதி இருந்தாலும், நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை மாற்றி அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதே திவால் சட்டத்தின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.