சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இந்தியா விடுதலை அடைந்தபோது மவுண்ட் பேட்டன் அவர்களால் திருவாவடுதுரை ஆதினம் மூலம் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில், பேரவை தலைவர் இருக்கையின் பின்புறம் வைக்க இருப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, தற்போது அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் உள்ள செங்கோல் 20 ஆதினங்கள் மூலம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்றார். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “28 ஆம் தேதி பிரதமர் திறக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வெள்ளையர்களுக்கும், நம் மக்களுக்குமான ஆளுமைப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிதான் பிரதமருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான செங்கோல் பரிமாற்றம். இரவு 10.30 முதல் 12 மணிக்குள் நடந்த பரிமாறுதல் அது. இந்தியாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் ஆளுமை பரிமாறுதல் பாரம்பரியப்படியே நடந்துள்ளது.
வெள்ளையர்கள் கூட அவர்கள் நாட்டில் பழைய பாணியிலேயே ஆட்சி பரிமாறுதலை நடத்துகின்றனர். அந்த நாடும் ஜனநாயக நாடுதான். ராஜாஜி தமிழ்நாட்டில் இருந்த ஆதினங்கள் பலருடன் ஆலோசித்து 'தர்ம தண்டம்' எனும் செங்கோலை திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து பெற்றார். செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு நகைக்கடைக்காரர்களை 28 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மரியாதை செய்வார். மேலும் 2021 பிப்ரவரியில் அந்த செங்கோல் குறித்து பத்மா சுப்பிரமணியன் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்று செங்கோலை வழங்க உள்ளனர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், வேளக்குறிச்சி, மதுரை, சூரியனார் கோயில், காமாட்சிபுரம், பேரூர், சிரவை, அவிநாசி, குன்றக்குடி, கோயிலூர், பத்திரக்குடி, பழனி, மயிலம், தொழுவூர், திண்டுக்கல் ஆதீனங்கள் உள்பட 20 ஆதீனங்கள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
நீதி, நியாயம், சமத்துவ ஆட்சிக்கான ஆசிர்வாதிக்கப்பட்ட அந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் மக்களவையில் சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட உள்ளது. பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் அந்த செங்கோல் இருந்த விவரம் பலருக்கு தெரியாமல் இருந்தது. 1978ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் செங்கோல் குறித்து பேசியிருக்கிறார். அதன் பிறகு ஊடகங்களில் அது குறித்த செய்தி வந்தது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் பத்மா சுப்பிரமணியம் பிரதமருக்கு செங்கோல் குறித்து கடிதம் எழுதினார்.