சென்னை வேளச்சேரியை அடுத்த மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் செல்வம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் (14) செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (செப்.16) பெற்றோர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மதியம் கார்த்திக்குக்கு ஆன்லைன் வகுப்பு நடந்துள்ளது.
அப்போது மாணவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவரது பெற்றோர், கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவைத் தட்டினர்.
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது கார்த்திக் தற்கொலையால் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மதியம் 2 மணி அளவில் கார்த்திக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்துள்ளது. இதையடுத்து தேர்வு ஒன்று நடத்தப்பட்ட நிலையில் தான் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.