காய்ச்சலால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு - டெங்கு காரணமா சென்னை: பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் புவியரசன். இவரது 9 வயது மகன் சக்தி சரவணன், அருகே உள்ள அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். சக்தி சரவணனுக்கு கடந்த 8ஆம் தேதி முதல் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சக்தி சரவணனுக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், ரத்த தட்டுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டதை அடுத்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி அவரை அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், உடல் உறுப்புக்கள் செயல் இழந்து வந்துள்ளது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி சரவணன் இன்று (அக் 17) அதிகாலை உயிரிழந்தார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், டெங்கு பாதிப்பு தமிழகத்தில் தற்போது அபாயகரமான நிலையில் இல்லை. அதேபோல் டெங்கு நோய்த்தொற்று பரவல் என்பது கட்டுக்குள் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னீர்குப்பத்தைச் சுற்றியுள்ள பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினர் - காரணம் என்ன?