சென்னை: 'வரையாடு' என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் 'நீலகிரி வரையாடு' என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகளை 'மவுண்டைன் மோனார்க்' என்று அழைக்கிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில், நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், பதினெண்மேற்கணக்கு நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி 1600-1700இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து "குறத்தி மலை வளம் கூறல்" என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு திட்டமானது நீலகிரி வரையாடு பற்றிய எண்ணிக்கை, விநியோகம் மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குதல், நீலகிரி வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், நீலகிரி வரையாட்டிற்கு உள்ள அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல், "நீலகிரி வரையாடு" இனங்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்கச் செய்கிறது.
1975இல் நீலகிரி வரையாடு பற்றிய முதல் ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஈ.ஆர்.சி டேவிதாரின் பிறந்த நாளான அக்டோபர் 7ஆம் நாள் நீலகிரி வரையாடு தினமாக அவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. "நீலகிரி வரையாடு" உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022இல் அரசாணை வெளியிடப்பட்டது.