சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபடி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிர்வாக அலுவலகக் கட்டடம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுவருகிறது.
இதை முதலமைச்சர் ஸ்டாலின் பத்து நாள்களில் தொடங்கிவைக்கவுள்ளார் என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு வளாகத்தில் அத்துறைக்கான தரவு அலகு ஒன்றை இன்று (டிசம்பர் 27) திறந்துவைத்தார்.
அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், "ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 26) மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டார். ஒமைக்ரான் பரவல் காரணமாக மருத்துவமனையில் முதல், இரண்டாம் அலையின்போது ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பிற்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளைத் தயார்செய்து வைக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதவரம் அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவப் பிரிவுகளில் மின்னணு தகவல் பலகை மூலம் தகவல்களை உடனுக்குடன் பெற்று மெட்டா பகுப்பாய்வு முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்திய மருத்துவ முறையின் மூலம் சிகிச்சைகளை மேம்படுத்த ஏதுவாக இந்தக் கல்லூரியில் தரவு மையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ முறைகளின்கீழ் 20 நோய்களுக்கான புள்ளியில் தரவுகளைப் பெற்று உடனுக்குடன் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது, இதற்காக இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணை அருகே 19.6 ஏக்கரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் கட்டப்படும்.
இதற்கான நிர்வாக அலுவலகம் இங்கு திறக்கப்பட உள்ளது. கரோனா இரண்டாவது அலையில் 33 ஆயிரம் நபர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 97 நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட 34 நபர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவர்கள் ஆய்வுசெய்த பின்னர் அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்.
உதயநிதி நடத்திய கூட்டம்
எஸ்ஜீன் டிராப் கண்டறியப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா எனக் கண்டறிய மத்திய அரசு அனுமதியளித்துள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படும். இந்த முடிவுகள் வருவதில் காலதாமதம் ஆகிறது. எனவே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மரபணு மாற்று ஆய்வகத்தின் மூலம் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்து மருத்துவம் அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம்.