சென்னை: இரண்டாம் திருமணத்துக்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபடுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் சுமார் 15க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.
வெளிநாட்டில் மருத்துவர் எனக் கூறி மோசடி
குறிப்பாக போலியான பெயர் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிவதாகக் கூறி பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து டெல்லி சென்ற தனிப்படை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குடியிருப்பில் பதுங்கி இருந்த நைஜீரியர்களான பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தவிர, மேலும் இரு நைஜீரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
3 நாள் போலீஸ் காவலில் விசாரணை
இந்தக் கும்பல் பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், நைஜீரியர்களை நேற்று முன்தினம் (செப்.13) மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தத் தொடங்கினர்.
இந்த விசாரணையில் நைஜீரியர்கள் சாலையோரங்களில் வசிக்கும் நபர்களிடம் பணத்தை அளித்து அடையாள அட்டையின் நகலை பெற்றுக் கொண்டு அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு உருவாக்கி பணப் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் போலியான மேட்ரிமோனியல் வெப்சைட்டை உருவாக்கி இந்தியா முழுவதும் பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.