சென்னை: அயனாவரத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் முகநூல் வழியாக நபர் ஒருவர் அறிமுகமானதாகவும், அவர் லண்டனில் தான் பணியாற்றிய போது அவர் தன்னுடன் நண்பராக இருந்ததாக கூறி பழகியதாக தெரிவித்துள்ளார்.
நாளடைவில் நட்பாக பழகிய அந்த நபர், பின்னர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் நர்சாக தனக்கு தெரிந்தவரின் மகள் ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவரது பெற்றோர் இறந்து விட்டதாகவும், மேலும் அவர்களுக்கு சொந்தமான நிலம் இந்தியாவில் இருப்பதால் அதை விற்பதற்காக அப்பெண் இந்தியாவிற்கு கூடிய விரைவில் வர இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வரும் அப்பெண்ணுக்கு உதவும் படி கூறி அந்த பெண்ணின் எண்ணையும் அவர் கொடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் தன்னிடம் நட்பு ரீதியாக பேசி வந்த நிலையில் திடீரென ஒரு நாள் சில விலையுயர்ந்த பரிசு பொருட்களை தனக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சில நாட்கள் கழித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தனக்கு போன் செய்து, லண்டனில் இருந்து விமானம் மூலமாக விலை உயர்ந்த சில பொருட்கள் பார்சலாக வந்துள்ளதாகவும், அதற்கு வரி மற்றும் சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் கட்டண தொகையாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 840 ரூபாயை தவணை முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு தான் அனுப்பியதாக புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் பரிசு பொருட்களை வாங்க சென்றபோது அப்படி ஒரு பொருளும் வரவில்லை என தெரிய வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி கணக்கு எண், செல்போன் எண் மற்றும் முகநூலில் கணக்கு தொடங்க பயன்படுத்திய ஈமெயில் ஐடி ஆகியவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடி கும்பல் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இருந்து செயல்பட்டது தெரிய வந்தது.