சென்னை:ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்காக ஆஜரானதற்காக அப்பாஸை கைது செய்துள்ளதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் வாதிட்டார்.
மேலும், பென்டிரைவ் (Pendrive) கைப்பற்றியதாக, என்ஐஏ அதிகாரிகள் குற்றம் சாட்டுவதாகவும், பென்டிரைவ் வைத்திருப்பது குற்றமாகாது எனவும், அதில் ஆதாரங்கள் உள்ளதா? என கண்டறிய வேண்டும் எனவும் வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கியத் தலைவராகவும், ஆயுதப் பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளதாக வாதிட்டிருந்தார்.