தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்; ரவுடி கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க என்ஐஏ மனு! - NIA seeks permission to take Karukka Vinod custody

Raj Bhavan petrol bomb incident: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ மனு தாக்கல்
ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ மனு தாக்கல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 11:54 AM IST

Updated : Dec 9, 2023, 2:56 PM IST

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்

சென்னை:கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு, இன்று (டிச.9) சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தை பார்த்ததாக கூறப்படும் ஆயுதப்படை காவலர் சில்வானிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கருக்கா வினோத் என்பவரை கிண்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்த விசாரணையில், நீட் தேர்வு விலக்கு வேண்டும் மற்றும் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தும் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ரவுடி கருக்கா வினோத் மீது ஏற்கனவே சென்னை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, மதுபானக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவைவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கிண்டி போலீசார், ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: ஆவணங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க காவல் ஆணையர் உத்தரவு!

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிண்டி காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் கிண்டி போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சில கோப்புகளை சேர்க்க வேண்டி இருந்ததால், ஆவணங்களை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை விரைவாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு, இன்று சம்பவம் நடைபெற்ற கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதைப் பார்த்ததாக கூறும் ஆயுதப்படை காவலர் சில்வானியை, புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனுத் தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள் - வாகன ஓட்டிகள் அவதி!

Last Updated : Dec 9, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details