சென்னை:கோயம்புத்தூர் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு தமிழ்நாடு காவல் துறை, சிபிசிஐடி என இறுதியாக என்ஐஏக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த விசாரணையில் ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிப்பாட்டு தளங்களை சேதப்படுத்தி பிரச்னையை உண்டாக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், இதயதுல்லா, சனோபர் அலி, முகமது தவ்பிக், உமர் பரூக், பெரோஸ் கான் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து, சம்பவ இடம் மற்றும் சதி திட்டம் தீட்டிய இடம் என பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், இன்று (பிப்.15) தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.