சென்னை: கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வாசலில், கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர், இஸ்லாமிய சித்தாந்தங்கள் அடங்கிய பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பிரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் தீவிர தன்மையினைக் கருத்தில் கொண்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ, கைது செய்யப்பட்ட 6 பேரையும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு வருகிற 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து என்.ஐ.ஏ நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தீர்மானத்தின்படி, மிகப்பெரிய தற்கொலைத்தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட மதத்தினருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்தொடர்ச்சியாக கோவை குண்டுவெடிப்பு வழக்குத்தொடர்பாக இன்று சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மின்னணு சாதனங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், கோவை வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவி செய்திருப்பதும், ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் வாகனத்தை கொண்டு மோதியவுடன் வெடித்து சிதறும் வெடிபொருள் ஆகியவற்றை இவர்கள் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் ரூ.80 லட்சத்துடன் சென்ற நபர் - போலீசார் விசாரணை