சென்னை: தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும் என எச்சரித்து உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ, மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு, நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞர் முகமது அப்பாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் தமது மனுவில், என்.ஐ.ஏ.வுக்கு எதிராக முகநூலில் சில கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானதற்காகவும் தம்மீது வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளதாகவும். எனவே விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என முகமது அப்பாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.