தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட கூட்டங்கள் கூடாது: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு - Judicial Member Pushpa Sathyanarayana

தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் மீதான கருத்துக் கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

narional green tribunal
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

By

Published : Aug 18, 2023, 10:40 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர சூழல் அமைவுகளைப் பாதுகாத்திடவும், மீனவ மக்களின் வாழ்வாதார, வாழிட உரிமைகளைப் பாதுகாக்கவும், கடலோர மண்டல மேலாண்மைத் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு வெளியிட்டது. வரைவுத் திட்டம் வெளியான நாள் முதல் பல்வேறு மீனவ அமைப்புகள் பல கிராமங்களில் மீனவர்களின் மீன்பிடி பகுதிகள், மீன்களின் இருப்பு குறித்த பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை, சில கிராமங்களின் பெயர்கள் தவறாகவும், சில கிராமங்களின் பெயர்களே விடுபட்டுள்ளதாகக் கூறி, திட்டம் குறைபாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளதால் இதன்மீது கருத்து கோருவது சட்டவிரோதமானது என குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், வரைவுத்திட்டம் மற்றும் வரைபடம் உரியச் சட்டவிதிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்படவில்லை எனக்கூறி, ஜேசு ரத்தினம், சரவணன் ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் சாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆக.18) விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான, தமிழ் நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தீபக் பில்கி, “பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகள், கருத்துகளைப் பெற்று அதை வரைவு திட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனைக்கேட்ட தீர்ப்பாயம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் முழுமையற்றதாக இருப்பதாகவும், இந்த வரைவு திட்டத்தைக்கொண்டு பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது எனவும், பல ஆண்டுகளாக மீனவர்களின் இந்த கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது.

மேலும், மீன்கள் எங்கு இனப்பெருக்கம் செய்யும் என்கிற விபரங்கள் கூட இல்லாமல் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கட்டுமானங்கள் இடம் பெறக்கூடாத இடங்கள் தவறாக குறிக்கப்பட்டால் கடலோர சூழல் அமைவுகள் பாதிக்கப்படும் எனக் கூறி இந்த மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேலும், முழுமையான திட்டத்தைத் தயாரித்த பின்னர், அதன் மீது மீண்டும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவால் ஆகஸ்ட் 23ல் கடலூர், திருநெல்வேலி மாவட்டங்களிலும், 24ல் விழுப்புரத்திலும், 25ல் தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களிலும், 26ல் கன்னியாகுமரியிலும், 29ல் தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும், 30ல் மயிலாடுதுறை மாவட்டத்திலும், 31ல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 18ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குமான வரைவு திட்டம் இன்னும் தயாராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் வீடு இருந்தும் அகதிகளாய் வாழும் 'கானகம்' மக்கள் கண்ணீர் கதை!

ABOUT THE AUTHOR

...view details