சென்னை: மணலி, எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவின் அடிப்படையில், தாமாக முன் வந்து டிச.7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று (டிச 09) விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில், கச்சா எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில், சென்னை பெட்ரோலிய கழகத்தின் தெற்கு நுழைவு வாயிலில் இருந்து இந்த எண்ணெய் தடயங்கள் தெரியப்பட்டுள்ளதாகவும், அது பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடத்திய விசாரணையில், வெள்ள நீரில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் கலக்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், எண்ணெய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டது.
அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு எண்ணெய் படலங்கள் பரவியுள்ள நிலையில், அதை எப்படி தடயம் (Traces of Oil) எனக்கூற முடியும் என்றும், நீர்வளத்துறை அறிக்கையில் பெருமளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
மேலும், அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த இயலாத நிலையில் உள்ளனர். எவ்வளவு எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது, எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உண்மை நிலையை அறிய தமிழக அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாசு கட்டுப்பாடு வாரிய தரப்பு, குழு அமைத்து விசாரணை நடத்தபட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, சென்னை பெட்ரோலிய கழகத்தின் தரப்பில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எந்த ஒரு கசிவும் இல்லை என்றும், வெள்ளத்தில் பரவி இருக்கக்கூடிய எண்ணெயை சேகரிக்கும் பணியை துவங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 25 ரசாயன ஆலைகள் இயங்கி வருவதால், எண்ணெய் கசிவிற்கு சென்னை பெட்ரோலிய கழகம் மட்டும் காரணமல்ல. இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள், ஏற்கனவே அமலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மீனவர்கள் தரப்பில், இந்த எண்ணெய் கழிவுகள் கழிமுகம் வழியாக கடலில் கலந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், எண்ணெய் கசிவால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், எண்ணெய் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், சென்னை மண்டலம் நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.
எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் டிச.11 ஆம் தேதி நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் கசிவு படலத்தின் மாதிரிகளை சேகரித்து, அதில் கலந்துள்ள ரசாயனம் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பதையும் கண்டறிந்து, மறுநாளே விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச.12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:எண்ணெய் கசிவுகள் ஏற்படவில்லை - மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஎல் விளக்கம்!