சென்னை:திமுக மகளிர் அணி சார்பில் "மகளிர் உரிமை மாநாடு" சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 5 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வந்தனர்.
மேலும் இந்த மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஹாசினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், இந்திய பெண்கள் தேசிய சம்மேளனம் (NFIW) பொதுச் செயலாளருமான ஆனி ராஜா பேசியதாவது, "இந்த மகளிர் உரிமை மாநாடு நடப்பதற்கு எல்லா விதமான வேலைகளையும் செய்து, நல்லபடியாக இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்று இந்த மேடையில் எங்களுடன் அமர்ந்து இருக்கும் முதலமைச்சருக்கு நன்றி.
கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காகவும், அவருடைய வாழ்க்கையே கொண்டாடுவதற்காக இந்த கூட்டத்தில் அமர்ந்து இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அன்பு முத்தங்கள். இப்போது இந்தியா முழுவதும் மதவாதம் விஷபாம்பு போல பரவி இருக்கிறது. மதச்சார்பற்ற இந்திய பாராளுமன்றத்தில், ஜெய் ஸ்ரீ ராம் மந்திரம் தான் கேட்கிறது.
குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியினர் என்பதாலும், அவர் ஒரு பெண் என்பதாலும், அவரை பாராளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து செங்கோலை பாராளுமன்றத்தின் உள்ளே வைத்த அரசு தான் மோடி அரசு. இதில் இருந்து மத்திய அரசு என்ன நிலையில் பெண்களை நடத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.