சென்னை:தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் முதல்முறையாக இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள நெக்ஸ்ட் தேர்வினை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாகவே நெக்ஸ்ட் தேர்வினை அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு தொடர்ச்சியாக கூறி வந்தது. இதற்கு தமிழக அரசு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும் கூட, இந்த தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
National Exit Exam என்று அழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு கடந்த 2019ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்முறையாக அமலுக்கு வருகிறது. இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகின்றன. அதன்படி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதல் கட்டத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் ஆறு பாடங்கள் இடம் பெறுகின்றன.
இவை அனைத்திலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஓராண்டு பயிற்சி மருத்துவர் என்ற நிலைக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஓராண்டு பயிற்சி மருத்துவர் நிலையை முடித்த பிறகு, இரண்டாம் கட்ட நெக்ஸ்ட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்கள் முதுகலை பட்டப் மருத்துவப் படிப்பிற்கு செல்ல தகுதி பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் கட்ட நெக்ஸ்ட் தேர்வில் ஒரு சில பாடங்களில் தோல்வி என்றாலும் கூட மீண்டும் அந்தப் பாட தேர்வு எழுதி முடிக்க வேண்டும். ஆண்டிற்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மே, நவம்பர் மாதங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு வரக்கூடிய நவம்பரில் முதல்முறையாக நெக்ஸ்ட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்தும் முகமை எது என்பதை தேசிய மருத்துவ ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.