இந்தியாவின் தேசிய கல்வி நாள்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வரை, இவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் தேசிய கல்வி நாள் மேற்கு வங்கத்தில் இன்று முதல் உள்ளூர் ரயில் சேவை தொடக்கம்!
கடந்த 7 மாதங்களாக, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ரயில் சேவை முடக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அதன் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று முதல் உள்ளூர் ரயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த 10 காவல் துறையினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இதற்கிடையில், ரகு கணேஷ் மற்றும் முருகனின் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் 130 நாட்கள் காவலில் இருந்ததாகவும், நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிசிஐடி விசாரணை முடிந்துவிட்டதாகவும், அதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேகரித்துவிட்டதாகவும்கூறி பிணை கோரினர். அவர்களின் பிணை மனுவில், அவர்கள் பிணை நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கப்படும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
வண்டலூர் வனவிலங்கு பூங்கா வண்டலூர் வனவிலங்கு பூங்கா இன்று முதல் திறப்பு!
கடந்த ஏழு மாதங்களாக, கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக வண்டலூர் வனவிலங்கு பூங்கா மூடப்பட்டிருந்தது. அதன் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் திறக்கப்படவுள்ளது.