சென்னை:அண்மையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மே.3) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன், செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், இணைச் செயலாளர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, சென்னை அடுத்த பையனூர் அருகே நலிந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக 10.5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதற்கான உத்தரவு காலாவதியாகியிருந்த நிலையில், அதனை புதுப்பித்துக் கொடுத்ததற்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, "தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நல்ல முறையில் நடந்து, அதில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம். கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்காக பையனூர் அருகே 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 10.5 ஏக்கர் நிலம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில் அதை மீண்டும் தமிழக முதலமைச்சர் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக தமிழக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருக்கிறோம். மேலும், எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நான் தற்கொலை செய்துகொண்டால் என்னவாகும் - படவிழாவில் பகீர் கிளப்பிய சாந்தனு!