சென்னை கொரட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து அக்ரகாரம் பகுதிக்குச் செல்ல பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றிப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அவசர காலங்களில் மருத்துவ உதவி வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்துவந்தது.
சிலர் விரைந்துசெல்ல வேண்டி ரயில்வே இருப்புப் பாதையைக் கடந்துசெல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டு அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்சாண்டர் சுரங்கப்பாதை கட்டுவது குறித்து சட்டப்பேரவையில் பலமுறை எடுத்துரைத்தார்.
இதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுரங்கப்பாதை அமைக்க அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் தொகுதி நிதியிலிருந்தும், மத்திய ரயில்வேயின் நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.
மேலும் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதன்படி, 2016இல் கொரட்டூர் பகுதியில் 21 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று, கொரட்டூர் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்சாண்டர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிவிட்டு சுரங்கப்பாதை வழியாகப் பயணம்செய்தார்.