சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு வகையில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிட்டிஸ் திட்டத்தின் மூலமாகவும், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஐசிசி 13வது கிரிகெட் உலகக் கோப்பை போட்டிக்காக, சென்னை வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிகெட் பயிற்சி அளித்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதன் 'X' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஐ.நா மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இணைந்து விளையாட்டுப் பயிற்சி கொடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு கிரிக்கெட் பயிற்சியானது அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிரிகெட் உலகக் கோப்பை போட்டி இம்முறை இந்தியாவில் நடக்கிறது. அந்த வகையில் சென்னையிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 48 பேருக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (அக். 15) பயிற்சி அளித்தனர்.
இதற்காக மாணவர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் இருந்து பேருந்து மூலம் சேப்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் டிம் சௌத்தி (Tim Southee), ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra), மார்க் சாப்மேன் (Mark Chapman), டிரென்ட் போல்ட் (Trent Boult) உள்ளிட்ட நியூசிலாந்து கிரிகெட் அணியின் வீரர்கள், பள்ளி மாணவர்களுக்கு கிரிகெட் பயிற்சி அளித்தனர். இதில், கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு உத்திகளை மாணவர்களுடன் நியூசிலாந்து அணி வீரர்கள் பகிர்ந்துகொண்டனர்" என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Kane Williamson Injury: முதல்ல கால்.. இப்போ கை.. என்னடா இது! கேன் வில்லியம்சனுக்கு வந்த சோதனை!