இது தொடர்பாக சிபிஐ (எம்) கட்சி இன்று (டிச.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்து சென்ற ஆண்டின் கசப்புகள் நீங்கி, எதிர்வரும் ஆண்டில் மகிழ்ச்சி மலரட்டும் என வாழ்த்துகிறோம்.
கோவிட்-19 எனும் பெருந்தொற்று உலக மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகம் குடிகொண்டுள்ளது. உயிர் வாழ்வதற்காகவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பெரும் போராட்டத்தை மக்கள் நடத்தவேண்டி வந்தது.
மறுபக்கம், மோடி அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியிலும், நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டம் நம்பிக்கையளிக்கிறது.
இந்த கொடுந்தொற்றுக்காலம் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. கொடுந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் கூட பாகுபாடு காட்டப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் ஏழை எளிய மக்களை கைவிட்டனர். வேலையின்மை, வறுமை அதிகரித்தது. மக்களின் அடிப்படை தேவைகள் கேள்விக்குறியாகின. மக்கள் சீனம், கியூபா, வியட்நாம்,வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகள் நோய்த்தொற்றிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மக்களை பாதுகாப்பதில் முனைப்புடன் முன்னணியில் நின்றன. மனித குலத்தின் பிரச்னைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வுகாண முடியாது. சோசலிசமே மக்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் பாதுகாக்க முடியும் என்பதை மீண்டும் உரத்துச்சொல்லி 2020 ஆம் ஆண்டு விடைபெற்றிருக்கிறது.
மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு கடந்த ஆண்டில் நிலவிய கொடுந்தொற்றுக்காலத்தை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டின் அனைத்து துறைகளையும் தாரைவார்க்கத் துணிந்தது. மறுபுறத்தில் தன்னுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை வெறித்தனமாக நிறைவேற்றியது. மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட அளிக்காமல் நட்டாற்றில் விட்டது.புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை, வேளாண் சட்டத்திருத்தம், தொழிலாளர் சட்டத்திருத்தம் என முற்றிலும் எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை வீழ்ச்சி அடைய செய்யும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.