சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இன்று நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி, இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.
பொதுவாக, புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் நள்ளிரவில் வான வேடிக்கைகளால் வர்ண ஜாலமிடுவதும், புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வர்.
புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும். குறிப்பாக, சென்னையைப் பொறுத்தவரை, நகரின் முக்கிய சுற்றுலாத் தலமான மெரினா கடற்கரையில் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடுவர்.
புத்தாண்டையொட்டி, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ராணி மேரி கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு மக்கள் கூடுவார்கள் என்பதால், திருட்டு மற்றும் அசாம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறையினர் மெரினா கடற்கரை பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.