சென்னை:தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளன.
மீதமுள்ள 11 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாடத்திட்டம் மாற்றம், கல்வித் தரத்தை உயர்த்துவது, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டப் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்கலைக் கழகத்துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பாடத்திட்ட மாற்றம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நான் முதல்வன் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று அனைத்து பல்கலைக்கழகங்களின் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கும் வகையில், பாடத்திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் கலைக்கல்லூரியில் கணக்கு, இயற்பியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடத்திட்டத்தை சேர்த்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கண்டிப்பாக 4 பருவத்திற்கு இருக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் பொதுவான பாடமாக கொண்டு வரவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும், திறன் மேம்பாடு கிடைக்கும் வகையிலும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.